உண்டா – இல்லையா?

அந்திமாலை வந்தபோது
அங்குதென்றால் தொட்டபோது
இந்தமாமன் நினைப்புனக்கு
வந்த தில்லையா?
தூக்கமின்றி கண்தவிக்க
ஏக்கத்திலே மனந்தவிக்க
தீக்குளித்த உணர்விலே நீ
நொந்த தில்லையா?
கொந்தளிக்கும் கடலைப் போல
குமுறுகின்ற மேகம்போல
தத்தளிக்கும் படகுபோல
ஆடவில்லையா
பொன்சிவந்த முகத்தினிலே
பூ” சிதறும் தேன்துளிபோல்
கண்கசிந்து என்னையெண்ணி
வாட வில்லையா?
மன்மதனும் வில்லெடுத்து
மலர்க்கணையை வீசும்போது
உன்மனதில் என்னுறவு
தீண்ட வில்லையா?
முல்லை” நீலம் ‘மா’ அசோகு
தாமரைசேர் ஐ மலர்கள்
மோக தாக விரக வேகம்
தூண்ட வில்லையா?
ஆட்டிவைக்கும் உணர்வு பொங்கி
அடங்கிடாமல் மீறும் போது
போட்டிபோட்டு என்நினைப்புத்
தாக்க வில்லையா?
பூகம்பத்தின் நெருப்பலைகள்
சுனாமி போல சீறிப்பாய்ந்து
புரட்டிப்போட்டு வறுத்தெடுத்துத்
தீய்க்க வில்லையா?
மாது நீயும் மனத்திரையில்
சூது கொண்டு மறைத்திதனை
ஏதுமறி யாதவள்போல்
ஏங்க வில்லையா?
உண்டா – இல்லையா?
Back to Top