கவிஞர் வாலியின் வாழ்த்துரை

கவிமாமணி திரு. அறந்தைத்திருமாறனின் அமுதத் தேனருவியில் அமிழ்ந்து நீராடி மகிழ்ந்தேன்

வண்ணத்தமிழ் அவருக்கு வசப்பட்டிருக்கிறது.
எண்சீர் விருத்தங்களின் இயல்பான முற்றெதுகைகளும் மோனைகளும், மரபுவழி மருவி நிற்பதோடன்றி
அனைத்துக் கவிதைகளிகளும்,
உருவகம், உவமை, உள்ளீடு, அனைத்தும்
கொடிகட்டிப் பறக்கின்றன.
பேராசிரியர். டாக்டர் சி.இலக்குவனார் சிறப்புரையில் சொல்லியது போல்..
அகத்தைத் தைக்கும் இனிய பாடல்களேயாம்.
அறந்தைத்திருமாறனின் பாடல்!
சுருங்கச் சொன்னால் அறந்தாங்கிக் கவிஞரின் எழுத்து அறந்தாங்கி நிற்கிறது.
ஆதாலால்தான் “சுரதா” மற்றும் “கண்ணதாசன்” “வா.மு.சேதுராமன்” போன்ற பெருங்கவிஞர்கள் திருமாறன் அவர்களது தீதறு புலமையைச் சிந்தை புல்லரிக்கப் பாராட்டி இருக்கிறார்கள். பல்வேறு தலைப்புகளில் பாடப்பெற்ற பனுவல்கள் எல்லாமே விழுமிய செழுமிய இறைச்சப் பொருள் தாங்கி நிற்கின்றன.
எதைத்தொட!!
எதை விட!!!
கற்கண்டின் எப்பக்கம் கைக்கும்
எல்லாப் பக்கமும் அண்ணிப்பதுபோல்
இந்தக் கவிதை நூலின்
எல்லாப் பக்கங்களும்
அண்ணிக்கின்றன.
தமிழுக்கு இவரால் தகவு சேருகிறது.
என்பதை ஊராறிய உலகறிய உரைப்பேன்.
கவிமாமணி திரு.அறந்தைத் திருமாறனுக்கு
என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
தனித்தனியாக இன்னஇன்ன கவிதை
என்னை ஈர்த்தது என்று சொல்ல வேண்டிய
பிரமேயம் ஏற்படவே இல்லை.
எல்லாக் கவிதைகளுமே
பாடுபொருளாலும்,
பாடுவோர் திறனாலும்,
மெருகேறி நிற்கின்றன.

மீண்டும் கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்

(வாலி)

Back to Top