பாதை மாறிடு கண்ணே

இயம் பெண்ணுக்கும் வயோதிகனுக்கு நடந்த திருமணத்திற்குப் பின். முதலிரவில்
அவன்: பாதை மாறிடு கண்ணே - வாழ்க்கைப்
பயணம் தொடங்கும் முன்னே!
மாதுனை தொடுவதும் இல்லை - எந்தன்
மனதிலும் ஆசைகள் இல்லை!
(பாதைமாறிடு)
அவள்:இளமை இருப்பது குறையோ - நான்
ஏங்கித் தவிப்பதும் முறையோ!
அழகை எனக்கேன் தந்தனை - இறைவா
ஆயுள் முழுதுமா நிந்தனை!
அவன்:இன்பம் தருமே இளமை - அதை
ஏங்கித் தவிக்குதே முதுமை!
துன்பம் வேண்டாம் கண்ணே - மாறிட
துணிந்திடு கைபடும் முன்னே!
(பாதைமாறிடு)
அவள்:பாதை மாறுமோ உள்ளம் - பெண்ணின்
பரம்பரைக் கேயது கள்ளம்!
அழகை எனக்கேன் தந்தனை - இறைவா
ஆயுள் முழுதுமா நிந்தனை!
கொதிக்குது மீறுது ஆசையே - நான்
கோடு தாண்டினால் வேசையே!
மிதிக்குதே கடமை கண்ணியம் - இதை
மீறுமோ எனது பெண்ணியம்!
(பாதைமாறிடு)
அவன்:இறைவன் கொடுத்தான் இளமை - இதில்
இன்பம் ஒன்றுதான் தலைமை!
பழியென நினைத்தால் மடமை - இதில்
பாவம் இல்லையிது கடமை
ஓடிடும் மானையும் பிடித்தேன் - அதை
உற்றவ ரிடம்ஒப் படைத்தேன்!
நாடிய செய்தேன் அன்று - எனக்கு
நாடியும் தளர்ந்தே இன்று!
(பாதைமாறிடு)
அவள்:பாதை மாறுமோ உள்ளம் - பெண்ணின்
பரம்பரைக் கேயது கள்ளம்
அழகை எனக்கேன் தந்தனை - இறைவா
ஆயுள் முழுதுமா நிந்தனை!
Back to Top