எனக்கு சிறுவயது முதலே தமிழ் மீது பற்று அதிகம் இருந்தது. குடும்பச் சூழல் காரணமாக நடுநிலைப் பள்ளிவரை தான் படிக்க முடிந்தது. ஆனாலும் மூதுரை, நன்னூல், நாலடியார், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்ற எளிமையான நீதி நூல்களைப்படித்த போது அது எனது மனதில் ஆழப் பதிந்தது. என் தாத்தா தாமாகவே பாடல்களை எழுதி அதை சிறு சிறு புத்தகங்களாக்கி காலணா & அரையணா விலைகளில் பாட்டுப்பாடி விற்பனை செய்தார் என்பதை என் தந்தை கூற நான் அறிந்திருக்கிறேன். அதனால் தானோ என்னவோ, பாட்டன் வழிப் பரம்பரையில் கவிபாடும் புலமை இயல்பாக எனக்கு வந்திருக்க வேண்டும். |
கண்டதைக் கற்க பண்டிதன் ஆனதுபோல் நான் அதிகம் படித்தது கவிதை மற்றும் பண்டைய கவிதை சார்ந்த இலக்கிய நூல்களைத்தான். சிலப்பதிகாரம், கம்பராமாயணம், கலிங்கத்துப் பரணி, கவி காளமேகம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற நூல்களைப் படிக்கும்போது பல பாடல்களுக்குப்ற பொருள் தெரிந்ததில்லை. ஆனாலும் விடாமல் அவற்றின் நடையழகை உணர்ந்து, பாடலில் துள்ளல் நடை & துடிப்பு நடை & ஆற்றொழுக்கு நடை இவைகளின் ஓசை நயம் & சந்த நயம் உணர்ந்து, தொடர்ந்து புரியும்வரை படித்து விடுவது எனது வாடிக்கையாக இருந்தது. ஒவ்வொரு நூலையும் பலமுறை படித்து வந்ததனால் கவிதை நடை எனக்கு எளிமையாகிப் போனது. |
எழுத்து, அசை, சீர், தளை, சொல், எதுகை, மோனை போன்ற கவிதை வழிமுறை கற்றறிய தொல்காப்பியம், நன்னூல், தண்டியலங்காரம், காரிகையிலக்கணம், யாப்பிலக்கணம், போன்ற நூல்களைப் படித்து அதன்படி நேர், நிரை, நேர் முன் நிரை, நிரை முன் நேர், கருவிளம், கூவிளம், காசு, மலர், நாள், பிறப்பு, மாத்திரை இவைகளை வைத்துக் கவிதை எழுதிப் பார்த்தால் அது இருந்தால் இது இல்லை இது இருந்தால் அது இல்லை என்கிற நிலைதான் மிஞ்சியது வழுக்கு மரம் ஏறுவதுபோல அது ஒரு முடிவுறா முயற்சியாக இருந்தது. திராட்சைப் பழத்துக்கு ஆசைப்பட்ட நரி தாவித்தவ்விப் பார்த்துவிட்டுகிடைக்கவில்லை என்றவுடன் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று கூறிச்சென்றது போல & நானும் இலக்கணம் கற்பதற்கு வெகுபாடு படவேண்டி வந்தது. (காரிகை கற்று கவிபாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்) & என்று ஒரு புலவர் கூறியிருந்ததை ஊக்குவிப்பது போல் இருந்தது அந்த முயற்சி. |
பிறகு எனது முயற்சியை திசை திருப்பி மாற்றிச் சிந்தித்தேன் சிறந்த கவிதை நூல்களில் ஒவ்வொரு நூலையும் ஒருமுறைக்குப் பலமுறை படித்தேன் ஓசை நயத்தோடு பாடியும் சந்த நயத்தோடு உணர்ந்தும் படித்தும் வந்தேன். பாடப் பாட ராகம் என்பதைப் போல், இறைக்கச் சுரக்கும் மணற்கேணி, கற்கச் சுரக்கும் கல்வி என்பது போல் & எப்படிப்பட்ட இலக்கணத்தில் எழுதப்பட்ட பாடலாக இருந்தாலும் தொடர்ந்து படிக்கும்போது அது எளிமையாக மனதில் பதிந்தது. பாடல் மட்டும் அல்ல & அதன் இலக்கணம் எளிமையாகப் பிடிபட்டு விட்டது. |
…………….என் பாட்டு
யாப்பின்றி போனாலும் போகட்டும், தமிழுக்குக் காப்பின்றிப் போகாது
என்று முத்தமிழறிஞர் செம்மொழிச்சீராளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னாக ஒருமுறை ஒரு கவியரங்கிலே பாடினார்கள். அந்தத் துணிச்சலில் பாடல் எழுத ஆரம்பித்தேன். |
தொடர்ந்து எழுதியபோது, இலக்கணத்தைத் தேடி நான் சரிபார்க்கத் தேவையின்றி, இலக்கணமும் & இலக்கணத்துடன் கூடிய சொல்லாட்சியும் தானே கூடி வந்தது. இலக்கணம் பார்த்து நான் பாட்டு எழுதியதில்லை & ஆனால், நான் எழுதுகின்ற பாடல்களில் இலக்கணம் முறையாக அமைந்திருந்தது, சந்தநயம் இருந்தது. |
நாடகப்பாடல்கள் & மேடைக் கச்சேரிப் பாடல்கள் & திருமண & வாழ்த்துப் பாடல்கள் & தலைவர்களை வரவேற்கும் வாழ்த்துப் பாடல்கள் & பத்திரிகைக்கான கவிதைகள் இப்படி பலவகையிலும் எழுதியதைத் தொடர்ந்து பலரும் பாராட்டியதால் எனக்குக் கவிதை எழுத ஊக்கமும் ஆர்வமும் ஆற்றலும் கிடைத்தது. |
1965ல் இந்தித்திணிப்பை எதிர்த்து நான் எழுதி, கஸ்தூரி பதிப்பகத்தின் மூலம் திருச்சியில் வெளியிடப்பட்ட எனது முதல்& கவிதைத் தொகுப்பான “அறந்தைத் திருமாறனின் இந்தி எதிர்ப்புப் பாடல்கள்” தடை செய்யப்பட்டு காவல் துறையால் பறிமுதலும் செய்யப்பட்டுவிட்டது. அதற்காக என்னைக் கைது செய்ய திருச்சி காவல்துறையினர் அறந்தாங்கி வந்து சேர்ந்தபோது, பேரறிஞர் அண்ணா அவர்களாலும் கலைஞர் கருணாநிதி அவர்களாலும் அறிவிக்கப்பட்ட போராளிகளில் ஒருவனாக இருந்ததால் நான் ஏற்கனவே இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் அரசியல் கைதியாக அறந்தாங்கி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். மாண்புமிகு கலைஞர் அவர்கள் பாளையங்கோட்டை சிறையிலே இருந்தபோது. நான் அறந்தாங்கி கிளைச்சிறையில் இருந்தேன். |
மாண்டதுவோ | முன்பிருந்த | வீரம் | எல்லாம் |
மடிந்ததுவோ | புறம்கண்ட | மறச்செய் | கைகள் |
தீண்டவரும் | கொடுநாக | இந்தி | என்றால் |
தீர்த்துவிடு; | ஏன்தயக்கம்; | எடுநீ | வாளை! |
பூண்டறுத்து | எருவாக்கித் | தமிழ்நன் | செய்யில் |
பூக்கவிடு | புதுப்பரணி | தொடுநீ | போரே |
ஆண்ட | இனவழிவந்த | அரிமா | வேநீ |
ஆர்த்தெழுவாய்; | போர்தொடுப்பாய் | வெற்றி | காண்பாய்! |
என்பது போன்ற கவிதை வரிகள் அடங்கிய எனது 23வது வயதில் என்னால் எழுதி 1965ல் வெளியான முதல் கவிதைத் தொகுப்பு வெளியிடப்படாமலே இன்று வரை தடைசெய்யப்பட்ட நூலாகிப் போனது. அதற்கிடையில் பல்வேறு கவியரங்குகளில் கலந்து கொண்டுள்ளேன் எத்தனையோ கவிதைகள் பத்திரிகைகளில் பிரசுரமாயிருக்கிறது. |
எனக்கு கவிதை எழுத மேலும் மேலும் ஊக்கமூட்டிய பத்திரிகைகளான தென்றல், மன்றம், முல்லை, எங்கள் நாடு, போர் முரசு, போர்க்குரல், தமிழ், மாலை முரசு, தமிழ்நாடு, தாயகம், பலே பையன், மீண்டும் கவிக்கொண்டல், மாலைமணி, தென்மொழி, திரைச்செய்தி, தஞ்சை செய்திக்கதிர், கிராம நலம், முரசொலி, சமநீதி, தென்னகம், குரள்நெறி, கலைப்பொன்னி, பொன்மனம், இதயக்கனி, புதிய நந்தவனம், கருப்பை, தமிழ்ப்பணி, இலங்கையைச் சேர்ந்த வீரகேசரி, தினகரன், சிங்கப்பூர் தமிழ்முரசு மற்றும் தமிழக அரசு 2009&ல் வெளியிட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா சிறப்பு மலர் மற்றும் மனநிழலாடிக் கொண்டிருக்கும் இன்னபிற பத்திரிக்கைகளையும் சேர்த்து அனைவருக்கும் எனது நன்றியைக் தெரிவித்துக் கொள்கிறேன். |
எனது 70 வயதில் வெளியிடப்படும் 70 பாடல்கள் கொண்ட இந்த நூல்தான் எனது முதல் கவிதைப் தொகுப்பாகும். கட்டைவிரலைக் காணிக்கையாக வாங்கிவிடக்கூடிய குருமார்கள் யாரும் எனக்கு இல்லை. ஆனாலும் நானும் ஓர் ஏகலைவன் தான். |
நான் செலுத்தும் காணிக்கையாக “வாழ்வரசி தமிழ்த்தாயின்” பாதமலர்களில் எனது இந்த “அமுதத் தேனருவி” கவிதை நூலை காணிக்கையாக சூட்டி மகிழ்கிறேன். |
இந்த கவிதைத் தொகுதியான “அமுதத் தேனருவி” நூலுக்கு சிரமம் பாராது அணிந்துரை வழங்கிப் பாராட்டுத் தந்த பெருந்தகைகள் முத்தமிழ் வித்தகர், செம்மொழிச் சிராளர், டாக்டர் கலைஞர், மு.கருணாநிதி மற்றும் கவிப்பேரரசர் கண்ணதாசன், காவியக் கவிஞர் வாலி, மொழிப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், மற்றும் உவமைக்கவிஞர் சுரதா, செம்மொழிக் காவலர் பெருங்கவிக்கோ, வா.மு.சேதுராமன் மற்றும் மத்திய & மாநில முன்னாள் அமைச்சர் சு.திருநாவுக்கரசர் எம்.ஏ.பி.எல். கவிஞர் காசிமுத்துமாணிக்கம், ஆருயிர் நண்பர் சென்னை லூகாஸ் டி.வி.எஸ். வெங்கட்ராமன், கப்பல் கவிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு ஊனில் கலந்துள்ள உயிர் கலந்து எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்நூலை சிறப்பான முறையில் உருவாக்கித் தந்த திருச்சி பிரிண்டிங் ஹவுஸ் உரிமையாளர் முனைவர் மு.அ.முஸ்தபா கமால், மற்றும் இந்த நூலை வடிவமைத்துத் தந்து உதவிய குடில் புத்தக உருவாக்கத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். |
அன்புடன்
(கவிமாமணி அறந்தைத்திருமாறன்)