அவையடக்க வணக்கம்

பண்அம் பலப்படுத்தும் பாட்டரங்கம் வந்திருக்கும்
என்அன்பிற் குறியோரே! ஏற்றமிகு தமிழறிஞர்
பாகற்காக் கவிஞன்நான் பாவாடை நானறியேன்!
(“பா” கற்காக் கவிஞன்நான் “பா”வாடை நானறியேன்!)
மேகக் கருக்கல்போல் மென்துளிகள் நான்தெளிப்பேன்
தொடையுண்டு இலக்கணத்தில் தொட்டதில்லை நானதனை
அடியுண்டு இலக்கணத்தில் அடிபட்டுப் பழக்கமில்லை
நேருண்டு நிறையுண்டு நெருங்கிநான் சென்றதில்லை
காயுண்டு கனியுண்டு கடித்ததனைப் பார்த்ததில்லை
கருவிளத்தைக் கூவிளத்தைக் காசுமலர் நாள்பிறப்பைக்
காரிகை அலங்காரம் கண்டதில்லை கேட்டதில்லை!
எழுத்தசையைச் சீர்தளையை எதுகையொடு மோனைகளை
அழுத்தமுடன் கற்றறியேன்; ஆனாலும் அவைப்பெரியீர்!
அழுத்தமுடன் பாப்பாட அரங்கேறி வந்துவிட்டேன்
பழுத்தவனோ, காயோ, பார்த்தறிவ துங்கள்கடன்
வெண்பா கலிப்பா விருத்தப்பா சந்தப்பா
எந்தப்பா வையும்நான் ஏறிட்டுப் பார்த்ததில்லை!
அப்பாவிற் கப்பா அருங்கவிதை பாடியதால்
இப்போநான் கவியரங்கில் இயல்பாகப் பாடவந்தேன்
குற்றங் குறையிருந்தால் கூறுங்கள் திருந்துகிறேன்
கொற்றவனின் முன்னே குடிமகனாய் வணங்குகிறேன்!
Back to Top