
அண்ணா நூற்றாண்டு விழா கவியரங்கக் கவிதை 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு – 2009 மலேசியா தமிழ்ப்பல்கலைக்கழக அரங்ககோலாலம்பூர், மலேசியா
| வெடிக்கின்ற | எரிமலையை; | பாய்ந்து | சீறி |
| விரிகின்ற | நெடுநதியை; | நாளும் | ஓயா(து) |
| அடிக்கின்ற | கடலலையை; | மேகத் | துள்ளே |
| அலறுகிற | இடியொலிகள் | அனைத்தும் | பேச்சில் |
| வடிக்கின்ற | ஆற்றலர்யார்; | கருத்தை | யள்ளி |
| வழங்குகொடை | வள்ளல்யார்; | மடமை | கண்டு |
| துடிக்கின்ற | உளத்தவர்யார்; | புரட்சி | யாளர் |
| தொடருக்கே | ஒளிவிளக்கு | அண்ணா | வன்றோ! |
| மாண்டதுவோ | முன்பிருந்த | வீர | மெல்லாம்! |
| மடிந்ததுவோ | புறம்கண்ட | வரலா | றெல்லாம்! |
| தீண்டவரும் | கொடுநாக | இந்தி | யென்றால்! |
| தீர்த்துவிடு! | ஏன் | தயக்கம் | எடுநீ வாளை! |
| பூண்டறுத்து | எருவாக்கித் | தமிழ்நன் | செய்யில் |
| பூக்கவிடு! | புதுப்பரணி | தொடுநீ | போரே! |
| ஆண்டயின | வழிவந்த | அரிமா | வேநீ |
| ஆர்த்தெழுவாய் | என்றவர்யார் | அண்ணா | வன்றோ! |
| பாட்டுநடைப் | பேச்சுக்கு | மன்னன்; | ஒன்றிப் |
| பழகுவதில் | கன்னலெனும் | அண்ணன்; | காளை |
| மாட்டுநடை | சாய்த்திட்ட | வண்ணன்; | இந்தி |
| மறித்திடவே | படைகொண்ட | தென்னன்; | தேர்தல் |
| கூட்டுநடை | போடுவதில் | கண்ணன்; | தமிழர் |
| குடிப்பெருமை | காத்ததிலே | முன்னோன்; | மாற்றார் |
| கேட்டுநடை | செயலழிக்கும் | எண்ணன்; | முற்றல் |
| கிழவர்க்கும் | அண்ணன்ஆம் | அண்ணா | அன்றோ! |
| இருள்போக்கும் | ஒளிமூட்டம்! | எழுச்சிக் | கோட்டம்! |
| இளந்தமிழர் | படைகூட்டும் | செயலின் | தோட்டம்! |
| மருள்நீக்கும் | அறிவாக்கம்! | மாண்புத் | தேக்கம்! |
| மனந்தளராச் | செயலூக்கம்! | மங்கா | நோக்கம்! |
| அருள்சுரக்கும் | பகுத்தறிவின் | கூட்டம்! | நாட்டோர் |
| அன்பிணைந்து | இனிதுவக்கும் | தேட்டம்! | ஆற்றல் |
| விறல்சேர்க்கும் | பொருந்தாணைத் | தலைமைத் | தங்கம்! |
| வீணான | மடமைகளைச் | சாய்த்த | சிங்கம்! |
| அறந்தாங்கி | நெறிதாங்கி | கொள்கை | தாங்கி |
| அன்பறிவைத் | தான்தாங்கி | மக்கள் | போற்ற |
| புறந்தாங்கும் | அகந்தாங்கும் | இலக்கி | யத்தை |
| பூதாங்கும் | தேன்தாங்கி | சுவையாய்த் | தந்தே |
| திறந்தாங்கி | உரந்தாங்கி | எழுச்சி | யோடு |
| தேன்தமிழை | வாழ்விக்க | இந்தி | மாய்க்க |
| மறந்தாங்கி | ஆர்த்தெழுவீர்! | மானங் | காப்பீர்! |
| மாத்தமிழீர்! | என்றவர்யார் | அண்ணா | வன்றோ! |
| தம்பிமார் | பலபேர்க்கு | அண்ண | னானார்! |
| தமிழ்காக்கப் | படைதிரட்டும் | தலைவ | ரானார்! |
| வம்பிழுக்கும் | மாற்றார்க்கும் | நண்ப | ரானார்! |
| வளரும்நல் | புதுக்கலைக்குத் | தந்தை | யானார்! |
| வெம்புகிற | மக்களுக்கு | வழிகள் | காட்டி |
| வேற்றுமொழி | தடுக்கின்ற | கோட்டை | யானார்! |
| தெம்புதரும் | மாமருந்தாய் | தமிழர் | வாழ்வில் |
| திருப்பத்தைத் | தந்ததனால் | இமயம் | என்பேன்! |
| அறநெறியில் | வாழ்ந்ததனால்; | கல்வி | கேள்வி |
| ஆற்றலிலே | தேர்ந்ததனால்; | தமிழைத் | தாங்கி, |
| வரலாறு | படைத்ததனால்; | மாற்றான் | தோட்ட |
| மல்லிகையை | மதித்ததனால்; | போராட் | டத்தில் |
| அறமுறையைப் | புகுத்தியதால்; | தொண்டார் | தன்னை |
| அன்பதனால் | கட்டியதால்; | கையைத் | தூக்கி |
| ஒருவிரலால் | உன்னைத்தான் | தம்பி | என்றே |
| ஒப்பரிய | செய்ததனால் | இமயம் | என்பேன்! |
| நின்றாலோ | பொதுக்கூட்டம்! | நடந்தா | லாங்கே |
| நீண்டதொரு | ஊர்வலந்தான்; | பொதுக்கூட் | டங்கள் |
| என்றாலோ | மாநாடு; | தேனீ | போலே |
| எழுச்சிமிகு | தம்பிகளின் | கூட்டம் | கூடும்! |
| வென்றாளும் | இப்படையா | தோற்கும்; | வேறு |
| எப்படைதான் | வென்றுவிடும்; | வரட்டும் | என்பார்! |
| குன்றாத | உளத்தோடு | எதையும் | தாங்கும் |
| இதயத்தைப் | பெற்றதனால் | இமயம் | என்பேன்! |
| மூஞ்சியைப்பார் | முகரையைப்பார் | என்றே | மாற்றார் |
| முறைகேடாய்த் | திட்டியதை; | பிறப்பைப் | பற்றி |
| காஞ்சிநகர் | வீதியிலே | பலகை | தன்னில் |
| கடுஞ்சொல்லால் | எழுதியதை; | அய்யா | கூட |
| வாஞ்சையொடு | கண்ணீர்த்துளி | பசங்க | ளென்று |
| வடுச்சொற்கள் | வீசியதை; | அகழ்வார் | தாங்கும் |
| பூஞ்சோலை | நிலம்போல | தாங்கிக் | கொண்ட |
| புனிதரதனால் | அரசியலில் | இமயம் | என்பேன்! |
| நாடெல்லாம் | தமிழன்போய் | வாழு | கின்றான் |
| நாடில்லை | தமிழனுக்கு | தமிழ்நா | டென்று |
| நாட்டிற்குச் | சென்னையென | இருந்த | பேரை |
| நயமுடனே | தமிழ்நாடென் | றாக்கித் | தந்தார்! |
| வேட்டுமுறை | ஓட்டுமுறை | இரண்டில் | ஆட்சி |
| வேரூன்ற | ஓட்டுமுறை | தேர்ந்த | மேதை |
| நாட்டிலுள்ள | ஏழைகளின் | சிரிப்பில் | அண்ணா |
| இறைவனையே | கண்டதனால் | இமயம் | என்பேன்! |
| பேச்சாளர், | எழுத்தாளர், | ஆய்ந்து | தேர்ந்த |
| பிழையறியாப் | பேரறிஞர்; | கதையா | சிரியர்! |
| ஆச்சரியம் | வேண்டாமிவர் | நடிகர்; | நல்ல |
| ஆசிரியர் | பத்திரிகை | உலகில்; | மேலும் |
| மூச்சிருக்கும் | வரைமாறாக் | கொள்கை | கொண்ட |
| முன்னோடி; | தனித்தலைவர்; | புதுமைச் | சிற்பி |
| மாச்சரியம் | கடந்தெவரும் | போற்றும் | பண்பின் |
| மாண்புடைய | அண்ணாவை | இமயம் | என்பேன்! |
| அரசியலில் | அண்ணாஓர் | இமயம் | என்பேன்! |
| அவருக்கு | நிகர்அவரே! | அதனால் | சொன்னேன்! |
| முரசறைவார்; | உன்னைத்தான் | தம்பி | என்பார்! |
| மூள்பகையை | ஒடுக்கிடவா | வாவா | என்றே |
| அறைகூவ | லும்விடுவார்! | ஆர்த்துப் | பாயும் |
| அடலேறை | யும்அடக்கி | அமைதி | காப்பார்! |
| விரைந்தோடும் | காட்டாற்றின் | திசையை | மாற்றி |
| வீரத்தில் | விவேகத்தைப் | பயிரே | செய்வார்! |
| அடக்குமுறை | ஒடுக்குமுறை | சிறைக்கூ | டங்கள் |
| அச்சுறுத்தும் | போர்ப்பரணி | ஆர்ப்பாட் | டங்கள் |
| இடக்குமுறை | கெடுக்குமுறை | எதிர்ப்பு | காய்ப்பு |
| இழிமொழிகள் | பழிவழிகள் | மிரட்டல் | எல்லாம் |
| தடுக்கும்முறை | கற்றிருந்தார்! | புத்தர் | காந்தி |
| தத்துவத்தை | அஹிம்சைதனைப் | பெற்றி | ருந்தார்! |
| அடுக்கும்முறை | செய்திட்டார்! | அதனால் | சொல்வேன்! |
| அரசியலில் | அண்ணாஓர் | இமயம் | என்பேன்! |
| படியரிசி | போட்டதனால்: | பஞ்சம் | தன்னைப் |
| பறந்தோடச் | செய்ததனால்; | லஞ்சம் | தன்னை |
| அடிகொடுத்து | விரட்டியதால்; | ஊழல் | தன்னை |
| அண்டவிடா | தாக்கியதால்; | அதிகா | ரத்தை |
| பிடித்தொடித்துத் | தனதாக்கிக் | கொள்ளா | ததால் |
| பின்பாட்டுப் | பாடிடஆள் | வைக்கா | ததால் |
| படிப்படியாய் | பொதுப்பணத்தில் | பங்க | ளாக்கள் |
| படகுக்கார் | வாங்காததால் | இமயம் | என்பேன்! |
| ஒட்டித்தான் | பிறந்தோமா | இல்லை; | இன்னும் |
| ஒருதாய்தான் | பெற்றாளா; | அதுவும் | இல்லை! |
| எட்டியெட்டி | தனித்தனித்தாய் | பெற்றுங் | கூட |
| எல்லோரும் | ஓர்குடும்பம் | ஆக்கி | வைத்தார்! |
| கட்டிவிட்டார் | பாசமெனும் | மாயத் | தாலே |
| கழகமே | குடும்பமென | ஆக்கிப் | பார்த்தார்! |
| சுட்டுவிரல் | நீட்டுகிற | அண்ணா | சொல்லில் |
| சொக்காதார் | யாரதனால் | இமயம் | என்பேன்! |
| கடல்மடையோ | திறந்ததென | மாற்றார் | போற்றும் |
| கருத்துநிறை | பேச்சுக்கு | நாக்கைத் | தந்தார்! |
| மடமைகளை | வேரறுத்துச் | சீர்தி | ருத்த |
| மாப்பணிகள் | புரிவதற்கு | அறிவைத் | தந்தார்! |
| விடமனைய | இந்தியினை | மறிப்ப | தற்கு |
| வியக்கின்ற | வகையினிலே | எதிர்ப்பைத் | தந்தார்! |
| கொடுவாளும் | கடுஞ்சிறையும் | கண்டு | அஞ்சாக் |
| குணக்குன்று | புற்றுநோய்க்கு | உடலைத் | தந்தார்! |
| பிறப்பென்பார் | இறப்பென்பார் | அதனை | வென்று |
| பெருவாழ்வு | வாழ்கிறவர் | அண்ணா | வன்றோ! |
| இறப்புலகு | சென்றாலும் | தமிழ்நாட் | டாரின் |
| இதயத்தில் | வாழ்கிறவர் | அண்ணா | வன்றோ! |
| சிறப்பாகச் | சொல்வதெனில் | அண்ணா | இன்னும் |
| சாகவில்லை | வாழ்கின்றார் | நூற்றாண் | டாக |
| சுரக்கின்ற | கவிதையது | பொங்கப் | பொங்க |
| சூழ்நிலையால் | முடிக்கின்றேன் | வணக்கம்! | நன்றி!! |

.
