வா.மு.சேதுராமனின் அணிந்துரை

தன்னேரில்லாத் தமிழ் மூதறிஞர் – செம்மொழிக் காவலர் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் அணிந்துரை

சங்ககாலத்தில் பல்துறைச்சான்றோர்களும் கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தனர் என்பதை நாம் அறிவோம்.

அந்தச் செந்தமிழ்ப் பரம்பரையின் வழிவழியாக அறந்தைத் திருமாறன் அவர்கள், “கவிதை நமக்குத் தொழில்” என்ற நிலை தவிர்ப்பினும், தொழில்துறை முன்னேற்றத்தின் வழி கிடைக்கும் வாய்ப்பின் அமைதிக்கு; கவிதை எழுதும் துறையில் கை தேர்ந்துவராக உள்ளார்.

கவிப்பேரரசர் கண்ணதாசன் அவர்களாலும் உவமைக் கவிஞர் சுரதா அவர்களாலும் தமிழ்ப்போராளி டாக்டர்.சி.இலக்குவனார் அவர்களாலும் பல்துறை சான்றோர்களாலும் பாராட்டப்பட்ட பெருமகன் கவிமாமணி அறந்தைத் திருமாறன் அவர்களின் “அமுதத் தேனருவி” என்ற கவிதை நூலிலிருந்து கவிதைகளைப் படித்துச் சுவைத்தேன்.

மடமையிருள் போக்குகிற ஒளியாய் வந்தார்!
கூன்விழுந்த தமிழகத்தை நிமிரச் செய்தார்!
உன்னைத்தான் தம்பியென்று விரலைக் காட்டி!
ஒப்பரிய சாதனைகள் நிகழ்த்தி வைத்தார்!

என்றெல்லாம் அறிஞர் அண்ணாவைப் பாடுவது நமக்குள் அண்ணாவைப் பதிப்பிக்கிறது.

தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைகள் புரட்சிச்சாதனைகள் வியக்கத்தக்க வகையில் உணர்ச்சியூட்டும் கவிதை வரிகளாக செம்மாந்து கிடக்கிறது.

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6 ஆம் மாநாடு மலேசியா கோலாலம்பூரில் 2009 ஆம் ஆண்டு நடந்தபோது கவிமாமணி அவர்கள் தம்புதல்வர்கள் இருவரோடும் வந்து மாநாட்டைச் சிறப்பித்தார்கள். அப்போது எனது தலைமையில் அவர்பாடிய கவிதையைச் செவிகேட்ட மலேசியத்தமிழ்மக்கள் பெரிதும் பாராட்டினர். அத்தனை செறிவோடும், நிறைவோடும், கருத்துச் செழுமையோடும் கவிதைகள் புனைபவர்.

கவிமாமணி அறந்தைத் திருமாறனின் கவிதை ஓட்டம் நீரோட்டம் போல மரபுக்கட்டுக்குள் கரைக்குள் அடங்கி நதிபோல ஓடும் மாட்சி மனத்தை நெகிழ்விக்கிறது.

பூப்போல அவள்மலர்ந்தாள் வாடை கொண்டாள்
பொல்லாத விதவையெனும் சொல்லால், உள்ளம்
தீப்போல சுடர்விட்டுக் கொந்தளிக்க
திகைக்கின்றாள்; தேம்புகிறாள்; தெளிவில் லாத
பாப்போல குழம்புகிறாள்; பவளச் செவ்வாய்
பசிகொண்டு துடிக்கின்றாள்; அவளைப் பாரீர்!
காப்போர்யார், வாழ்விப்பீர்! தவறோ சொல்வீர்!
கட்டாயம் விதவைமணம் வேண்டும்! வேண்டும்!!

என்று விதைகளின் மறுமணம் பற்றிப்பாடி நம் மனத்தில் உணர்வை எழுப்புகிறார் சமுதாயத்தை சிந்திக்கத் தூண்டுகிறார்.

கவிமாமணிக்கு அகவை 70 ஆனாலும் அகப்பாடல் கைவரப்பெற்ற கலையாகி வருகிறது. “கோதைதரும் போதை” என்ற பாடல் இளைஞர் தம் காதல் பாதையாகத் திகழ்கிறது.

மஞ்சம் தந்திடும்நல் விஞ்சும் சுகமனைத்தும்
கொஞ்சித் தந்திடும்நற் கோதையாள்! - இவள்
பஞ்சு மலரடியில் அஞ்சு புலத்தின்வழி
மிஞ்சத் தரும்சுகப் போதையாள்!
வஞ்சி இவளுடைய எஞ்சும் உடலழகால்
நஞ்சைத் தேனாக்கும் செயலினாள்; முனிவர்
அஞ்சித் தடுமாறி அலைந்து நிலைமாறி
துஞ்சும் நிலைக்காக்கும் மயலினாள்!

என்ற சந்தப்பாடல் குற்றாலக் குறவஞ்சியின் நற்றிறம் பாடல்போல நடைகொழிக்கிறது. காதல் வெள்ளம் இவர் கவிதைகளில் கரைபுரண்டு ஓடுகிறது.

கலைஞரின் கதாநாயகன் கதாநாயகி தேர்தல் அறிக்கை சாதனைகளை “எங்கள் நாடு” மற்றும் குன்றெழுந்த விரிகதிரோன் என்ற தலைப்பிலும் அடுக்கடுக்காகப் பாடுகிறார்.

தூங்கும் உலகைத் துயிலெழுப்புமாறு தூக்கத்தை யெல்லாம் தொடர்ந்து சொல்லும் கவித்திறம் நம்மைச்சிந்திக்க வைக்கிறது.

இத்தனை தூக்கமும் விழிக்கும் ஓர்நாள்

இதய மிலாதவர் விழிப்பது எப்போ?

என்று கவிமாமணி கேட்கும் கேள்வி விடைதேட நடைபோடுகிறது இவர்தம் கவிதை ஆற்றல்.

இவருடைய கவிதைகள் அனைத்தும் மக்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுகிறது.

எழு-விழி, என்னும் கவிதையில்

பாடுபடு பலனுண்டு; மண்ணை வெட்டிப்
பகுத்துப்பார்! தங்கமொடு வைரம் உண்டு!
கேடுவிடு; பிறர்வாழத் தொண்டு செய் நீ
கேட்காத போதும் இறை அருள்கிடைக்கும்
ஆடுவிட காடுகெடும்; நாணல் இட்டால்
ஆறுகெடும்; இதுபோன்ற செயல்கள் நீக்கு
ஈடுபடு ஊறுபடா செயல்கள் செய்நீ
எப்போதும் வாழ்வினிக்கும் இன்பம் தேங்கும்!

எனப்பாடி ஊறுபடா முயற்சியில் ஊன்றி நின்றால் உயர்வுண்டு, ஒளியுண்டு என்ற எண்ணத்தைக் கோபுரம் போல் சமைக்கிறார்.

தன் வாழ்க்கை அனுபவங்களையெல்லாம் கவிதையாக்கி அச்சத்தை நீக்கி உச்சத்தை அடையும் வழிமுறைகளை யெல்லாம் தெளிவாகப் பாடுகிறார்.

உன்னைநீ நம்பு;உன் செயலை நம்பு
தன்னையறி, துணிந்தியங்கு; செயலை நாட்டு
போர்நடத்து, சூழ்ச்சி, பழி வென்று காட்டு
புறமுதுகிட் டோடப்பகை நொறுக்கிப் போடு!
எது உன்னால் முடியாது!

என்று வீர முழக்கமிடும் கவிமாமணியின் கவிதைகள் சமுதாயத்தை தன்னேரில்லாத வெற்றி மகுடத்திற்கு இட்டுச்செல்லும் புரட்சிப்பாதையாக உள்ளன.

அகந்தை ஆணவத்தைவிடு, பணிவோடு துணிவுகாண், அதற்காகக் தலைகுனிந்து விடாதே பண்புடைமை, அன்புடைமைதேர், வெற்றி சூழும் என்று இளைஞர்களை அறைகூவி அழைக்கும், அறந்தையாரின் ஆக்கக் கவிதைகள் உலகத்தின் ஆயிரம் கண்களின் பார்வைகளாக ஒளி உமிழ்கின்றன.

காதல், வீரம், மறுமலர்ச்சி, தன்னம்பிக்கை போன்ற தடங்களிலும் தடம்பதிக்கும் கவிமாமணி அவர்களின் அனுபவப்பட்டறிவு, தமிழ்ச்சமுதாயத்திற்கு நிச்சயம் பயன்தரும்.

வெல்லும் கவிதை படைத்த நல்லவர் வல்லவர், கவிமாமணி அறந்தைத்திருமாறன் வாழிய நீடுழி! வாகை சூடுக!

புதையலை யெடுத்த தைப்போல்
புன்னகை பூத்த தைப்போல்
விதையதோ முளைத்த தைப்போல்
வீணைதன் இசையி னைப்போல்
பதை இருள் துன்பம் நீக்கும்
பாயிருள் ஒளிபோல் நன், மண்
பதையினில் அறந்தை யாரின்
பாக்களோ நிலைத்தே ஓங்கும்!
காலத்தின் கணக்கைப் போலும்
கண்ணொளி நோக்கம் போலும்
பாலத்தின் இணைப்பைப் போலும்
பகுத்தறிவு ஆற்றல் போலும்
கோலத்தின் அழகைப் போலும்
கொள்கையின் முடிவைப் போலும்
ஞாலத்தில் திருமா றன்நன்
நடைக்கவி வாழ்க! மாதோ!

அன்பன்

(பெருங்கவிக்கோ&வா.மு.சேதுராமன்)

Back to Top