தெங்குகன்னல் | வாழைபலா | சேர்ந்ததெங்கள் | நாடு | |
சீருலாபோல் | காருலாவும் | சிறப்புமிகு | நாடு | |
மங்களஞ்சேர் | மஞ்சளிஞ்சி | மாங்கனிக | ளோடு | |
மணமிகுந்த | சந்தனமும் | அகில்விளையும் | நாடு | |
பொங்குபுனல் | பாயும்ஆறு | புகழ்மிகுந்த | நாடு | |
பொதிகையெனும் | மலைதழுவி | தென்றல்தரும் | நாடு | |
தட்டினாலும் | தங்கமெங்கும் | வெட்டினாலும் | வெள்ளி | |
பிளாட்டினமு | மிரும்புமலு | மினியமுள்ள | நாடு | |
தங்குபுகழ் | தாங்கிநிற்கும் | தனிச்சிறப்பு | நாடு | |
தாவும்அலை | மேவுகடல் | முத்துகொண்ட | நாடு | |
சிங்கமொத்த | வீரமக்கள் | சிறந்திருக்கும் | நாடு | |
சேரசோழ | பாண்டிமன்னர் | ஆண்டிருந்த | நாடு | |
கங்கையோடு | கடாரமீழம் | வெற்றிகொண்ட | நாடு | |
காரிமய | உச்சியிலே | கொடிபொறித்த | நாடு | |
கனகனையும் | விஜயனையும் | கல்சுமக்க | வைத்து | |
கண்ணகிக்குச் | சிலைவடித்த | காட்சிகண்ட | நாடு | |
வாரணங்கள் | போரடிக்க | சோறுடைத்த | நாடு | |
பாரதப்போர் | நடந்தபோதும் | பசியொழித்த | நாடு | |
முத்துமணி | பவளம்ஏலம் | மயில்தோகை | யோடு | |
மிதந்துகடல் | கடந்துதந்தம் | விற்றுவந்த | நாடு | |
எட்டுத்தொகை | பத்துப்பாட் | டுப்பதினெண் | கணக்கும் | |
இயலுமிசை | கூத்துகுறள் | இனிதுயர்ந்த | நாடு | |
கம்பரொட்டக் | கூத்தர்புக | ழேந்தியவ்வை | யோடு | |
கபிலரிளங் | கோவாழ்ந்த | புலவர்மிகு | நாடு | |
மொழிவளர்க்கச் | சங்கமாய்ந்த | மூத்ததமிழ் | நாடு | |
விழித்திருந்து | மொழிகாத்து | விருதுகொண்ட | நாடு | |
உலகமெல்லாம் | செம்மொழியாய் | உயர்ந்ததமிழ் | நாடு | |
உண்டுபல | மதமெனினும் | ஒன்றிவாழும் | நாடு | |
மாரியொத்த | பாரிஓரி | காரிவள்ளல் | நாடு | |
மீறிடாத | மனிதநேயம் | மிகுந்திருக்கும் | நாடு | |
பிச்சையாளர் | தொழுநோயாளி | ஆதரவில் | லாதார் | |
பெருமையுடன் | மகிழ்ந்துவாழ | வழிவகுத்த | நாடு | |
கஞ்சியூற்ற | ஆளிலாத | முதியோரினைத் | தாங்கி | |
காலமெலாம் | உதவித்தொகை | வழங்குகின்ற | நாடு | |
கண்கண்ணாடி | காற்செருப்பு | கருணையில்லம் | தந்து | |
காப்புறுதி | தந்துநோயைத் | தோற்கடித்த | நாடு | |
ஏழைவாழ | குடிசைமாற்றி | வீடுதரும் | நாடு | |
இரந்துஉண்டு | வாழ்வோரிலா | ஏற்றமிகு | நாடு | |
வேட்டிசேலை | துணியணிகள் | ஏழைகளுக் | கீந்து | |
வீட்டுக்கொரு | விளக்கெரிய | வழிவகுத்த | நாடு | |
ஒருரூபாய் | கிலோஅரிசி | உவந்துதரும் | நாடு | |
உணவளித்து | முட்டையுடன் | கல்விதரும் | நாடு | |
கிணற்றுக்கில | வசமின்சாரம் | கிடைக்கச்செயும் | நாடு | |
கேட்காமலே | விவசாயிதன் | கடன்தீர்க்கும் | நாடு | |
நாடில்லாத | நரிக்குறவர் | வீடுபெற்ற | நாடு | |
நாலுவகைப் | படிப்பறிவை | அவர்க்களித்த | நாடு | |
ஏழைகளும் | சிரித்திருக்க | ஏற்றதொண்டு | செய்தே | |
இறைவனையே | குடிசைக்குள் | இருக்கவிட்ட | நாடு | |
இந்தநாடு | “எங்கள்நாடு” | இனியதமிழ் | நாடு | |
ஏற்றமிக்க | நாடுவேறு | இதற்குஇல்லை | ஈடு! |
2011 ஜனவரி 22-23 தேதியில் திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலகத்தமிழ்க் கவிஞர்கள் பேரவை – மற்றும் – தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளையினர் இணைந்து ஆய்வுசெய்து தேர்ந்து கவிஞர் அறந்தைத் திருமாறனுக்கு கவிமாமணி விருது வழங்கினார்கள். ஆய்விற்கு எடுத்துக் கொண்ட கவிதை இது…